அன்பே சிவம்! ஏன் கருணையே சிவம் இல்லை?
தத்துவம் 18 ஜூன், 2026

அன்பே சிவம்! ஏன் கருணையே சிவம் இல்லை?

ஈம

ஈசன் மகன்

எழுத்தாளர்

சுயவிவரம் பார்க்க

உலக சமயங்களை நாம் பார்க்கிறோம். அதில் இறைவனை பல்வேறு வகையில் வெளிப்படுத்துகின்றனர். ஒன்றில் மிக சாதுவாக. ஒன்றில் மிகக் கடுமையாக. ஒன்றில் அணுகுவதற்கு மிக கடினமானவனாக. ஒன்றில் எளிமையானவனாக. இவை அனைத்திலும் மனிதனுக்குண்டான குணாதிசயங்களை இறைவன் மேல் ஏற்றி கூறியதைப் போல் இருக்கும். அவை நல்ல கருத்துக்களை சொல்கிற போதும், இறைவனின் இயல்பான பண்பை அறியாது, நிறைவாகாத கருத்தாகவே இருக்கும். உலக சமயங்களிலேயே இறைவனை அவன் இருக்கும் இயல்பிலேயே உணர்ந்து அல்லது இறைவனால் உணர்த்தப் பெற்றிருக்கும் ஒரே சமயம் நம் சிவ செந்நெறியே ஆகும்.

Inline image

அவ்வாறு உணர்வதற்கு மிக முக்கியமானது மரபும் மொழியுமாகும். மரபையும் கட்டமைத்து காத்து கடத்துவது மொழியே. மொழியின் விசாலம் சிந்தனையின் விசாலம். மொழியின் ஆழம் உணர்வின் ஆழம். பிற மொழிகளில் இல்லாத மிக உன்னதமான சிறப்புகள் தமிழ் மொழியில் உள்ளது. அதனை தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களிலிருந்து அறியலாம். அதில் மிக முக்கியமான இரண்டு சொற்கள் அன்பும் அறமும் ஆகும். இந்த இரு சொற்களுக்கு இணையானச் சொற்கள் வேறு மொழிகளில் இருக்குமா என்றால் தெரியவில்லை !

இவை இறைவனின் இயல்புத் தன்மையை நேரடியாக வெளிப்படுத்தும் சொற்களாம். அறம் என்ற சொல்லை வேறொரு தருணத்தில் அறிந்து கொள்ள முற்படுவோம். அன்பை இப்போது புரிந்து கொள்வோம். எத்தனையோ சொற்கள் இருக்கின்றபோது இறைவனை அன்போடு ஒன்றுபடுத்தி 'அன்பே சிவம்' என்று ஏன் சொல்ல வேண்டும்? இரக்கம், பாசம், நேசம் இப்படி பல சொற்கள் இருக்கின்றன, ஏன் அன்பு? அன்பு என்பது மனித உணர்ச்சிகளிலிருந்து / உணர்வுகளிலிருந்து தோன்றுவதல்ல. அது இயற்கையில் உட்செறியப்பட்டிருக்கும் ஒன்று. இயற்கை என்பது சுயம்பு அல்ல. இறைவனின் சுய மடைமாற்றம். இறைவனின் இயல்புத் தன்மைகள் யாவும் அதில் தென்படும். அவ்வியல்புத் தன்மைகள் இயற்கையில் புரையோடி இருக்கும். அன்பு இறைவனிடமிருந்து வந்தது. இறைவனே அன்பாய் இருப்பதனால் இயற்கையிலும், அந்த இயற்கையோடு ஒன்றி வாழும் மனிதர்களிடத்திலும் அன்பு மலர்ந்து காணப்படுகிறது. அன்பு கொண்ட மனதின் அலைவரிசை இறைவனின் சித்தோடு/ உணர்வோடு ஒத்துப் போகிறது. (இறைவனிடமிருந்து அன்பை பெறுவதற்கு ஏதுவாய் அவர்கள் மனம் இருக்கிறது).

சரி அன்பு என்றால் என்ன? அன்பு என்பது அனைத்தும். அன்பு என்பது நிறைவின்/ செம்மையின் பொருட்டு ஏற்படக்கூடிய இறை உணர்வு. அதுதான் அன்பு. செம்மையை/ நிறைவை நாடுவது அன்பு. அன்பில் பற்றாக்குறையில்லை சுயநலமில்லை, பேராசையில்லை, பற்றுகள்/ பாசங்கள் இல்லை. அன்பு, அறத்தின் வழியில் வெளிப்படுவது. அதில் அதர்மம் இருக்காது. அதில் கனிவு மட்டுமின்றி அறச்சீற்றமும் உள்ளடங்கியிருக்கும். அது தாய் பிள்ளையின் மீது வைத்திருக்கும் பாசத்திலும் மேலானது. பாசம் என்பதில் சுயநலம் இருக்கும்.பற்று என்பதில் மாயை இருக்கும். இரக்கம், கருணை என்பதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஒரு உயிரின் மீது கருணை காட்டும் போது காட்டுபவர் மேலும் காட்டப்படுபவர் கீழும் இருப்பது தவிர்க்க முடியாதது. கொடுமைகள் செய்யும் பாவியாக இருந்தாலும் தன் பிள்ளைகள் மீது பாசம் பந்தம் இருக்கத்தான் செய்யும்.

பாசத்தில் அறம் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சைவ சித்தாந்தம் பாசம் பற்றி சொல்லி இருப்பதை கவனிக்கவும். அன்பு எல்லா உயிர்களின் மீதும் ஒரே அளவு கொண்டுள்ள நிறை உணர்வே ஆகும். சிவன் அன்பானவன். அவன் எல்லா உயிர்களுக்கும் தாய். ஒரு தாய், தான் பெற்ற பிள்ளைகளின் மீது மட்டுமே பெரும் பாசம் கொண்டிருப்பாள். சிவனுக்கு எல்லா உயிர்களும் அவன் பெற்ற பிள்ளைகளே. ஆகவே அவன் எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் பாரபட்சமின்றி ஏற்றத்தாழ்வுமின்றி பாசம் காட்டியே ஆக வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் போது அது அன்பு ஆகிறது. சிவனே படைத்தவன் என்பதால் அவனால் வேறு வழியே இன்றி அன்பாகத்தான் இருக்க முடியும். அதுதான் 'அன்பே சிவம்'. அன்பு ஏற்றத்தாழ்வு இல்லாதது என்பதனால்தான் சிவம் நம்மிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. "நான் இறைவன், நீங்கள் என்னிலும் கீழானவர்கள் என்று சிவம் எப்போதும் எண்ணியதே இல்லை. மற்ற சமயங்களை போல் அல்லாது சைவ சமயத்தில் இறைவன் அடியார்களுக்கு அடியானாக விளங்குபவன். அதனால் தான் தன்னுடைய அடியாரான காரைக்கால் அம்மையாரையே அம்மா என்று தனக்குக் தாயாக்கிக் கொண்டான். தன்னுடைய அடியாரான கண்ணப்ப நாயனாரை அப்பா என்று அப்பனாக்கிக் கொண்டான்.

Inline image

இத்தகைய சிவத்திடம் ஆணவம் என்ற இழி குணம் இயல்பிலேயே இருப்பதில்லை. அன்பே வடிவான சிவம் சமத்துவத்தின் வடிவிலேயே இருக்கிறது. அவனை வணங்கக்கூடிய அடியார்களாகிய நாமும் அவனைப் போலவே அன்பு நிறைந்தவர்களாக, சமத்துவத்தை நாடுபவர்கள் ஆக இருக்க வேண்டும். அன்பை நான் நிறை உணர்வு என்று சொல்லியிருந்தேன். ஒரு உயிரானது அனைத்து பரிமாணங்களிலும் முழுமை பெற்று வாழ்வதே நிறைவு அல்லது செம்மையாகும் {நிறைவு அல்லது செம்மை பற்றிய புரிதலை பெற நாம் எழுதிய 'யார்தான் வள்ளுவன்' என்ற புத்தகத்தை படிக்கவும்}. உயிர் செம்மை படுதலால் நமக்கு ஏற்படும் உணர்வு 'அன்பு'. அன்பு என்பது அடிப்படை தேவையுடன் நின்று விடுகிறது. மாயை பேராசை போன்றவை இல்லாததால் இயல்பிலேயே அது சத்தியத்தை அல்லது இறுதி உண்மையை நோக்கியதாயுள்ளது. "மனமது செம்மையானால்" - "மாயை அற்று இறுதி உண்மையை, சிவத்தை நோக்கி மனசு நெறிபட்டால்" என்று பொருள். அத்தகைய செம்மைப் படுத்தலில் எல்லா உயிர்களும் நிலைநின்று தழைக்க வேண்டும் என்று செம்மைபட்ட ஒரு மனது நினைப்பதே அன்பு.

கருத்துகள் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதலில் கருத்தைச் சேருங்கள்!