அன்பு இன்னது என்று தெரிந்த பிறகு அன்போடு நாம் எவ்வாறு இருப்பது என்ற கேள்வி வரும். அன்போடு இருத்தல் என்பது நாம் சுய நினைவோடு எடுக்கும் தன் முடிவா? நம் பிறப்பிலேயே கிடைக்கப்பெறும் பிறவி இயல்பா? இரண்டும். நம்மிடம் அன்பு உள்ளதா என்பதை நாமே புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். நம்மைப் பொறுத்தவரை நாம் நல்லவர்களே. அன்புமிக்கவர்களே. தன்னுடைய இருண்ட பக்கங்களை பார்க்கும் பக்குவமும் தன்னடக்கமும் நம்மில் பலருக்கு இல்லை. இது ஒரு வகையில் நல்லதே.
இறை உணர்வு இல்லாத மனது தன் இருள் பக்கங்களை அறிந்தால் குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். ஆகையால் தன்னைத்தானே தற்பாதுகாத்துக்கொள்ள , குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிக்க நம் மனது நம்மை நல்லவன் என்று சமாதானம் செய்யும். இருப்பினும் அது உண்மை இல்லை என்பதால்; அது ஒரு மாயை என்பதால், அதன் இறுதி இலக்கு நன்மையானது அல்ல அத்தகைய தற்காப்பு நம்மை இறைவனிடம் இட்டுச் செல்லாது. நாம் என்ன தவறு செய்கிறோம் என்று நாமே அறியாத வண்ணம், நம்மை அதை அறிவதில் இருந்து தற்காத்து தீமைக்கும் பாவச் செயல்களுக்கும் வழிவகுக்கும்.
மாயையை வெல்லும் ஒரே வழி / முதல் படி ஆணவத்தை அழித்தல். ஆணவம் அழித்தலை இன்னும் புரியும்படி சொன்னால் தன்னை தாழ்த்திக் கொள்ளுதல் எனலாம். இறைவன் முன்பு, பெரியோர் முன்பு, சத்தியத்தின் முன்பு, இயற்கையின் முன்பு, தன் மனசாட்சியின் முன்பு பணிந்து வணங்கி தன்னை தாழ்த்திக் கொள்ளுதலே ஆணவத்தை அழித்தல் ஆகும். இதில் இறைவன், பெரியோர்….. போன்ற ஒவ்வொரு சொல்லும் ஆழமான உட்பொருள் கொண்டது. இவ்வாறு நாம் நம்மை தாழ்த்திக் கொள்ள நம் சுயம் விரிவடையும். நம்முடைய இருண்ட பக்கங்கள்நம்மை காயப்படுத்தாது ஆற்றுப்படுத்தும். அதிலிருந்து விடுவிக்கும். நம்மை தீர்வை நோக்கி நகர்த்தும். அதுதான் பதியாகிய இறைவனடி சேருதல். சரி, ‘சுயத்தை விரிவாக்குதல்’ என்றால் என்ன?
நம் சுயத்தை நாம் எதனோடு தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நாம் அன்பு உடையவரா சுயநலவாதியா சாமானிய மனிதனா என்பதை வெளிப்படுத்தும்
எடுத்துக்காட்டு:
-
ஒருவன் தன் சுயத்தை தன் பிழைப்புக்கான தேவைகளோடு. தன் மனதோடு தன் உடலோடு மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்வானேயானால், அவனை நாம் சுயநலவாதி என்போம்.
-
ஒருவன் தன் சுயத்தை, தன் பிள்ளைகள், மனைவி,, தாய் தந்தை என்று தொடர்புபடுத்திக் கொள்வானேயானால், அவனை நாம் சாதாரண குடும்பஸ்தன் என்போம்.
-
அதே ஒருவன் தன் சுயத்தை தன் சாதி மதம் போன்ற அடையாளங்களோடு தொடர்புபடுத்திக் கொள்வானேயானால், அவனை சாதியவாதி மதவாதி என்போம்.
-
சிலர் தன் சுயத்தை உலகில் வாழும் பாட்டாளி மக்களோடு தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அவர்களை கம்யூனிஸ்டுகள் என்போம்.
-
சிலர் தன் சுயத்தை உலகில் வாழும் எல்லா மனிதர்களோடும் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அவர்களை ஞானிகள்,மனிதநேயவாதிகள் என்போம். புத்தர், இயேசு போன்றவர்களை போல.
இவ்வாறு தாங்கள் தன் சுயத்தை எதனோடு தொடர்புபடுத்தி, அடையாளப் படுத்திக் கொள்கிறார்களோ, அந்த அடையாளத்திற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
ஒரு சுயநலவாதி தன்னை பாதுகாத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வான்
ஒரு குடும்பஸ்தன் தன் குடும்பத்திற்காக என்ன தியாகத்தை வேண்டுமானாலும் செய்வான்
உழைக்கும் மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து போராடி வாழ்ந்த மனித தலைவர்களை நாம் பார்க்கிறோம்
இயேசு போன்ற மகான்கள் உலக மக்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டார்கள்

- இதில் ஒரு சிலர் தன் சுயத்தை அனைத்தோடும் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்தோடும், அனைத்து உயிர்களோடும், உயிரற்றவைகளோடும் கூட, ஏன் இந்த ஒட்டுமொத்த இயற்கையோடும் தன் சுயத்தை தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.
இந்த மண், மலை, பெய்யும் மழை, செடி, கொடி, விலங்குகள் எல்லாவற்றிலும் தன்னை பார்ப்பார்கள்.
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
என்பார்கள். முல்லைக் கொடியுயோ, வாடிய பயிரோ அதற்காக வருந்துவார்கள்.

இந்த பேரண்டத்தையே தன் பிண்டத்தோடு இணைத்துக்கொள்வார்கள். இவை அனைத்தையும் படைத்த இறையோடு தன் சுயத்தை பொருத்திக்கொண்டு அதனோடு ஒன்றரக் கலந்து விடுவார்கள். அந்த இறை அன்பே வடிவமாதலால் தாமும் அன்பு மயமாகிப் போவார்கள். அவர்கள் வாழ்வின் அனைத்தும் அன்பு மயமாகிப் போகும்
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
என்று வாழ்வியலாகவே அன்பை கொண்டவர்கள். அவர்கள் சிந்தனையோ உலகு,உயிர்கள், இயற்கை என்று விரிந்த சுயத்தை வெளிப்படுத்தும். அவர்களை நாம் தமிழ் மரபோர் அல்லது சிவ மக்கள் என்போம். அவர்களுக்குள் இருக்கும், ‘இறைவன் முன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பண்பு’ அவர்களை அடியார்கள் என்று அழைக்கப்பட காரணமாயிற்று. சுற்றி வளைத்து அவர்களை சிவனடியார்கள் என்று சொல்லலாம். ஆம் சிவனடியார்கள்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதலில் கருத்தைச் சேருங்கள்!