கவலையை அறுத்தால் தான் உங்களால் வாழமுடியும். உங்களைக் கவலைப்படுத்தும் விதமாக சிறிய அல்லது பெரிய நிகழ்வுகளால் நிறைந்ததுதான் வாழ்க்கை. அதே நேரத்தில் பிரம்மாண்டமான இன்பங்கள் உங்கள் வாழ்வில் கொட்டிக் கிடக்கின்றன. கவலைகளுக்காக உறங்கிக் கிடப்பதால் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க முடியாது. எனவே கவலைகளை அறுத்து எறியுங்கள் கவலைகளை மறந்து தொலையுங்கள்.
மறதி என்பது வரம். “மனக்கவலை மாற்றல் அரிது” என்கிறது வள்ளுவம். எனவே கவலைகளையும் அதுகுறித்த நிகழ்வுகளையும் மறந்து போங்கள். நம்மை அடித்து அழுகவைத்த அப்பா ஆறுதல்படுத்த நமக்கு வாங்கித்தந்த லட்டை அழுதுகொண்டே சுவைத்து மகிழ்ந்து அப்பா அடித்ததை மறந்து போனவர்கள்தான் நாம்.
வாழ்வின் சின்னச்சின்ன இன்பங்களுக்குக் கூட அடிமைப்பட்டதுதான் நம் மனசு. அப்படிப்பட்ட இன்பங்களை அனுபவித்து கவலைகளை மறந்து போங்கள். மகிழ்ந்து வாழுங்கள் கவலைகளை மறக்கும்போதுதான் இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கத் துவங்குகிறோம்.
அ) மனக்கவலை
நாம் செய்யும் செயல்களுக்குத்தான் நாம் பொறுப்பே தவிர அந்தச் செயல் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல. ஏனெனில் விளைவுகளை ஏற்படுத்துவது நம் செயல்கள் மட்டுமே அல்ல. நாம் எதிர்பார்க்கும் விளைவுகளுக்கு நம் செயல்களோடு புறச்சூழலின் ஒத்திசைவும் காரணமாகிறது. எனவேதான்
“செய்வன திருந்தச் செய்”
என்கிறது தமிழ்.
நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டோடும் மகிழ்ச்சியுடனும் செய்தால் போதும். (இதுதான் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கர்மயோகமாக வடிவமைக்கப்பட்டது.) நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டோடு செய்யும்போது நமக்கு கிடைக்கும் மகிழ்வே நம்மை இன்பமாக வாழவைக்கும்.
அப்பனும், சுப்பனும் வகுப்புத் தோழர்கள் அவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது அப்பன் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று எல்லோருக்கும் லட்டு கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தான். சுப்பனோ தேர்வில் தோல்வியடைந்ததால் அழுதுகொண்டு இருந்தான்.
பிறகு காலங்கள் கடந்தன இருபது வருடங்கள் கழித்து ஒரு அரசு அலுவலகத்தில் பியூன் வேலை கிடைத்து திருமணம் புரிந்து மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் சுப்பன். எம்.இ முடித்துவிட்டு எல்லா கம்பெனிகளும் ஓவர் குவாலிஃபிகேசன் போன்ற பல்வேறு காரணங்கள் கூறி நிராகரித்ததாலும் தண்டச்சோறு, உருப்படாதவன் என்ற பெயரோடும், தேவையில்லாத பழக்க வழக்கங்களாலும் சீரில்லாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தான் அப்பன். இப்போது நீங்கள் சொல்லுங்கள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானபோது யார் லட்டு கொடுத்திருக்க வேண்டும். யார் அழுது கொண்டிருக்க வேண்டும் என்று.
நம் வாழ்வின் நிகழ்வுகளில் இதுதான் நல்லது இதுதான் கெட்டது என்று தீர்மானிக்கும் சக்தி நமக்கு இல்லை. எனவே அதுகுறித்து துக்கப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
நம் வாழ்வின் நிகழ்வுகள் நமக்கு இன்பமானதாக இருந்தால் நாம் கொண்டாடி மகிழலாம். துன்பமானதாக இருந்தால் நண்பர்களிடம் கூறி ஆறுதலடையலாம். அவ்வளவுதான். இதற்காக மனம் ஒடிந்து புலம்புவது நம் ஆறாம் அறிவுக்கு அழகல்ல. நல்ல நிகழ்வுகளை நல்ல இலக்குகளை முன்நிறுத்தி அவற்றை நோக்கி ஈடுபாட்டோடு செயல்படுங்கள் போதும். நல்ல இலக்குகளுக்காக செயல்பட்டு தோற்றுப்போவதில் கூட ஒரு சுகம் உண்டு எல்லாத் தோல்விகளும் துன்பத்தைத்தான் தரும் என்று கூற முடியாது. தோல்விதான் வெற்றிக்கு பாதை அமைக்கும். வெற்றியின் அளவை பெரிதினும் பெரிதாக்குவது தோல்விகள்தான். எனவே மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கு உங்களுக்கு ஏற்படும் தோல்விகளை அனுபவியுங்கள் உங்களுக்கு ஏற்படும் தோல்வி எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதைவிட பெரிய வெற்றி உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
ஆ) பணக் கவலை :
நம்மால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்று கவலைப்படாதீர்கள். பணத்திற்கும் சந்தோசமாய் இருப்பதற்கும் துளி அளவுகூட சம்பந்த மில்லை. பால்பண்ணை ஒன்றில் ஒருவர் வேலை செய்து வந்தார். அன்பான மனைவி, பாசமான இரண்டு குழந்தைகள் சொர்ப்ப வருமானம் என்றாலும் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு கண்டெக்டர் (நடத்துனர்) வேலை கிடைத்துவிட்டது. இப்போது வருமானம் அதிகமாகி விட்டது.
ஆனால் இன்பம் தொலைந்து விட்டது. வருமானம் அதிகமாகிவிட்ட பிறகு சாராயம் குடிக்க ஆரம்பித்து விட்டார். சம்பளத்தில் குடிக்கவில்லை படிக்காசில்தான் (உபரி வருமானம்) குடிக்கிறேன் இதிலென்ன தப்பு என்று துவங்கிய பழக்கம் படிப்படியாக சம்பளத்தையும் கரைத்து குடிக்க துவங்கிவிட்டது. பால்பண்ணையில் வேலை செய்தபோது கிடைத்த சொற்ப வருமானம் கூட இப்போது அந்த குடும்பத்திற்கு கிடைப்பதில்லை. மேலும் சாராயம் குடித்துகுடித்து உடல் கெட்டு மருத்துவச் செலவு என்ற புதிய செலவும் கூடிவிட்டது. அந்த குடும்பம் படும் துன்பத்திற்கு காரணம் பணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பணம் சிலரை துன்புறுத்தும் சிலரை இன்புறுத்தும். பணம் அதிகமாகி விட்டால் நீங்கள் அதற்கு முதலாளியாக இருக்க முடியாமல் உங்களை அது துன்புறுத்தும். அதிகமாக பணத்தை வைத்துக் கொண்டு இன்புற வாழ்தல் என்பது ஒரு கலை.
“ஊருணி நிறைந்ததுற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு”
என்று இதற்கு வழிகாட்டுகிறது வள்ளுவம். “என்கிட்ட இருக்கிற ஒரு கோடி ரூபாயில் பத்து லட்சம் தீர்ந்தாலும் பரவாயில்லை. அவனை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்” என்று கூறும் நண்பர்களை நான் பார்த்திக்கிறேன். உங்களிடம் உள்ள பணம் ஊரணி நீர் போல அடுத்தவர்களின் இன்பத்திற்காக பயன்படுத்தலாம். இல்லையேல் நீங்கள் அனுபவித்து இன்புறலாம்.
ஆனால் அடுத்தவர்களுக்கோ, உங்களுக்கோ துன்புறுத்தலை தந்து விடக்கூடாது என்ற அறிவோடு பணமும் அதிகமாக இருந்தால் அது இன்பம். இந்த அறிவில்லாமல் பணம் மட்டும் அதிகமாக இருந்தால் அது துன்பம். அதனால்தான்
“வாசி தீரவே காசு நல்குவீர்”
என்று இறைவனிடம் கேட்கிறார் ஞானசம்பந்தர். வாசி என்றால் குற்றம் என்று பொருள். குற்றமில்லாத பணமாக நாம் பெற வேண்டும். குற்றமுள்ள பணம் குற்றமுள்ள நம் நெஞ்சை துன்புறுத்திக் கொண்டே இருக்கும். இறைவனை வழிபடுபவர்களுக்கும், திருவேடம் பூண்டவர்களுக்கும், திருப்பண்பை பெற்றவர்களுக்கும் குற்றமில்லாத பணத்தை தேவையான அளவில் வழங்கி அருள்வார் இறைவன்.
எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்தால் இறைவன் நமக்கு பணம் தந்து விடுவானா? என்றால் இல்லைதான். ஆனால் நான் அவ்வளவு சம்பாதித்து விடுவேன். நான் இவ்வளவு சம்பாதித்து விடுவேன் என்று நீங்கள் வெறித்தனமாக எடுத்த முயற்சிகள் எல்லாம் நீங்கள் நினைத்த அளவு பணத்தை தந்திருக்கிறதா? என்று நீங்களே கூறுங்கள்.
“என்னதான் எண்ணெயை தடவிக்கொண்டு உருண்டு புரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்” என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் என்ன முயற்சித்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அளவில்தான் கிடைக்கும். இதைத்தான் அதிர்ஷ்டம் என்கிறோம்.
அது இஷ்டத்திற்கு வருவதால் அது அதிர்ஷ்டம் என்கிறோம். நம் இஷ்டத்திற்கு அது வரவேண்டும் என்று நாம் முயற்சித்தால் அதன் பேர் அதிர்ஷ்டம் அல்ல. அது துஷ்டம். துஷ்டம் துன்பத்தை தரும் அதிர்ஷ்டம் இன்பத்தை தரும். துஷ்டம் பெற முயற்சிக்கக் கூடாது அதிர்ஷ்டம் பெற முயற்சிக்கலாம்.
அதிர்ஷ்டம் பெற முயற்சிப்பதுதான் இறைவழிபாடு சிவபெருமானை வழிபடும் அடியவர்களுக்கு எந்த அளவு பணம் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களோ அந்த அளவில் பணத்தை அதிர்ஷ்டமாக உங்கள் முயற்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அருளுவார் என்பது உண்மை. அப்படியானால் பணத்தைப் பெற நாம் எந்த முயற்சியும் செய்யக் கூடாதா என்றால் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பணத்திற்காக அல்லாமல் இன்மை என்ற துன்பம் நம் வாழ்வில் புகுந்து விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

“முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்”
என்கிறது வள்ளுவம்.
இன்மை என்ற துன்பம் புகுந்துவிடாமல் இருக்க நீங்கள் செய்யும் முயற்சிதான் திருவினை ஆக்கும் “திருவினை” என்றால் அது இறைவினையை அதாவது இறைசெயலைத்தான் குறிக்கும். தன்வினையை யாரும் திருவினை என்று கூறிக்கொள்ளமாட்டார்கள். இறைவனின் செயலைத்தான் திருவினை என்று கூறுவது மரபு. இறைவன் விளையாடும் விளையாட்டு திருவிளையாட்டு, தெரு விளையாடல் என்ற நம் முயற்சி இறைவனின் திருவிளையாடலால் நமக்கு வேண்டிய பணம் அருளும்.
இ) திறமை பற்றிய கவலை
இரண்டு விதத்தில் திறமை பற்றிய கவலை தோன்றும். தன் திறமை மதிக்கப்படவில்லை. தன் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கவலை. மற்றொன்று தனக்கு எந்த திறமையும் இல்லையோ? என்ற கவலை. தனக்கு எந்த திறமையும் இல்லையோ என்ற கவலை பிறர் திறமையாக செயல்படுவதை பார்த்து தோன்றும். எந்தத் திறமையும் இல்லாமல் எவனும் தோன்றுவது இல்லை.
உங்கள் திறமையை நீங்கள் உணராத போதுதான் உங்களுக்கு இவ்வாறு தோன்றும். உங்களுக்கு என்று உங்களுக்குள் உள்ள திறமையை கண்டுணர்ந்து வெளிப்படுத்துவதே உங்கள் வேலை. நீங்கள் இசைத்துறையில் இருக்கிறீர்கள் என்றால் உங்களைவிட திறமை காட்டுபவர்களை பார்த்தால் உங்களுக்கு ஒரு வித பொறாமை தோன்றும். இந்த பொறாமையைக் கவலையாக உணர்பவர்களும் உண்டு. இந்தப் பொறாமையை தன் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கான உந்துசக்தியாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
இறைவன் நன்மை தீமையற்ற ஒருபொருளை நமக்கு கொடுக்கிறார் அதுதான் பொறாமை அதை சாபமாக்கித் துன்புறுவதும், வரமாக்கி இன்புறுவதும் நம் கையில்தான் உள்ளது. உங்களிடம் ஏற்படும் பொறாமையை நீங்கள் வரமாக்கி இன்புறுங்கள்.
“கற்றாரை கற்றாரே காமுறுவர்”
என்கிறது தமிழ். ஒரு இசைக் கலைஞரின் திறமையை பார்த்து இன்னொரு இசைக்கலைஞர்தான் பொறாமை கொள்ளமுடியும். இசை கற்காதவர் ரசிக்க மட்டுமே முடியும். உங்கள் துறை சார்ந்து உங்களுக்கு எழும் பொறாமை உங்களுக்கான வரம்.
நான் இவ்வளவு திறமையாக இருந்து என்ன பயன் என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஏங்கி கவலைப்படுவது வீண்வேலை. இவ்வாறு கவலைப்பட்டால் உங்களிடம் உள்ள திறமை குன்றத் துவங்கி விடும் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் திறமையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று உணருங்கள். உங்கள் திறமை அதிகமாகும்போது அது மேலும் ஒளிரும். அந்த ஒளியை யாராலும் மறைக்க முடியாது. ஏனெனில்,
“ஞாயிற்றை கைமறைப்பார் இல்”
என்று தமிழ் கூறுகிறது.
இப்படி பணம் குறித்து, திறமை குறித்து என்றில்லை எது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சின்ன விஷயத்திற்குக் கூட சிலர் கவலைப்படுகிறார்கள். நேரமே சரியில்லை சார் என்று ஒருவர் கவலைப்பட்டார். ஏன் என்று கேட்டேன். திருமண விருந்தில் பாயாசம் ஊற்றிக் கொண்டு வந்தார் சர்வர். எனக்கு முன் இலை வரைக்கும் பாயாசம் சரியாக வந்தது. என் இலையில் ஊற்ற வரும் போது பாயாசம் தீர்ந்து விட்டது என்றார். அதனால் என்ன சார் எடுத்து வந்து ஊற்றுவாரே என்றேன் நான். எடுத்து வந்தார் ஆனால் என் இலையை விட்டுவிட்டு என் அடுத்த இலையிலிருந்து ஊற்றிச் சென்றார். இப்போது சொல்லுங்கள் உண்மையிலேயே எனக்கு நேரமே சரியில்லைதானே என்றார். இப்படி பாயாசத்திற்காக புலம்பி கவலைப்பட்டால் உங்களுக்கு பாயாசமே கிடைக்காது. நீங்கள் ஏமாறுவதுதான் நடக்கும். உங்களுக்கு பாயாசம் ஊற்றாமல் சென்ற சர்வரை அழைத்து வந்து பாயாசம் ஊற்றச் சொல்லி சாப்பிடவேண்டும். இதற்காக வெட்கப்படுவதோ, கவலைப்படுவதோ நேரம் சரியில்லை என்று புலம்புவதோ உங்களுக்கு பாயாசம் தராது.
“அழுகின்ற குழந்தைதான் பால்குடிக்கும்”
“வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்”
என்று நமக்கு கற்றுத் தருகிறது. நம் தமிழ்.
