நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. உயிரிலிருந்தே உயிர் தோன்றும் என்பது உங்கள் அறிவியல் விதி. தாய் தந்தையாகிய உயிர்களிடமிருந்தே நாம் தோன்றினோம். குரங்கு என்ற உயிரினத்திலிருந்தே மனித உயிரினம் தோன்றியது. இப்படியே பரிணாமத்தின் வேர்பிடித்துச் சென்றால் உலகத்தின் முதல் உயிரினம் கடல்நீரில் அமீபா என்ற ஒரு செல் உயிராக தோன்றின என்பர். அந்த உயிரும் உயிரிலிருந்துதானே தோன்றியிருக்க வேண்டும். அமீபா என்ற உயிர் எந்த உயிரிலிருந்து தோன்றியது என்றால் விடை சொல்லத் தெரியாது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரிய சந்திர இருசுடர்கள், இயமானன் ஆகிய எட்டு வடிவங்களாக இறைவன் இருக்கின்றான் என்று சைவநெறி கூறும் அந்த இயமானன் என்பதே உயிர் ஆகும். அந்த உயிரிலிருந்தே உயிர்கள் தோன்றி வளர்ந்தன. நாமும் அப்படித்தான் வந்தோம். உயிர்கள் மட்டும் அல்ல எல்லா உலகங்களும் எல்லா பொருட்களும் என அனைத்தும் இறைவனிடமிருந்து தோன்றி வந்தன. எல்லாம் இறைவனின் வியாபகத்தன்மையே.
ஒன்றுமில்லாத ஒருமையாக - இறைவன் இருந்தான் அதனிடமிருந்து நாதம்(ஒலி) தோன்றியது அந்த ஒலிதான் பிரணவம் ஆகும்.
"எல்லா உலகமும் எல்லா பொருளும்
எண்ணறிய வள்ளாளன் ஆதி பரமசிவனது
சொல்லால் ஆகுமே கோணாரே"
என்பார் இடைக்காடர்.
ஒருமையாகிய பிரணவச் சொல்லில் இருந்து ஆண், பெண், இருள் ஒளி, இன்பம், துன்பம் போன்ற இருமைகள் வியாபிக்கிறது. பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஆண், பெண், அலி போன்ற மும்மைத் தன்மைக்கு வியாபிக்கிறது. பிறகு நால்வேதம், ஐம்பூதம், அறுசுவை, ஏழுகரங்கள், எண்செல்வம், நவதானியம் என்று வியாபித்துக் கொண்டே அதாவது விரிந்து கொண்டே செல்கிறது.
நம்மால் அறிந்து கொள்ள இயலாதவாறு இதன் அடிமுடி இருக்கும். அதே போல இதன் அகலத்தையும் நம்மால் அறிந்து கொள்ள இயலாது. உதாரணமாக வியாபகத்தின் ஒரு நிலையாகிய குரங்கு என்ற உயிரினத்தை எடுத்துக் கொண்டால் எத்தனை வகை குரங்கு இனங்கள் உள்ளன என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. இறைவனின் விரிவுத்தன்மை என்பது நம் அறிவால் அளக்க முடியாதது. நம் வேலையெல்லாம் அவனை போற்றி செய்வதே ஆகும்.
இறைவனின் வியாபகம்
ஒன்றுமில்லா ஒருமை - இறைவன்
ஒருமை - பிரணவம்
இருமை - ஆண், பெண்
மும்மை - பிரம்மன், விட்டுணு, உருத்ரன்
நான்மை - நான்மறை
ஐமை - ஐம்பூதம்
அறுமை - அறுசுவை
ஏழ்மை - எழுசுரம்
எண்மை - எட்டுச்செல்வம் (அஷ்டலெட்சுமி)
ஒன்பான்மை - நவதானியங்கள்
இப்படி விரிந்து கொண்டே செல்லும்.
அடிமுடி காண முடியாமலும், நீள அகலம் உணரமுடியாத வகையிலும் இறைவன் வியாபித்து இருக்கிறான். ஆணவத்தால் காண முயன்று தோற்றுப் போனவர்கள்தான் உண்டு. எனவே நாமும் அவர்கள் வழியில் சென்று தோற்றுப்போகாமல் சைவத்தின் பண்பாகிய பேதமற்ற அன்பால் இறைவனை உணர முயற்சிக்க வேண்டும். அப்படி உணர்ந்தவர்களே நம் பெரியோர்கள் அதற்கு வழிகாட்டுவதே சைவநெறி.
