சைவத்தில் சாதி பேதம்
தத்துவம் 18 ஏப்ரல், 2026

சைவத்தில் சாதி பேதம்

பச

புதின் சுரேஷ்

எழுத்தாளர்

சுயவிவரம் பார்க்க

"சாதி சமய சளைக்கை விட்டே நல்
சோதியைக் கண்டேனடி"

என்கிறார் வள்ளல் பெருமான். சாதிசமய பேதமற்ற அன்புருவே இறைவன் அந்த சோதியைக் காணவேண்டும் என்றால் பேதங்களைக் கடந்த அன்பு வேண்டும். ஆதித் தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பாகுபாடு என்ற ஒன்றே கிடையாது. சாதிப்பாகுபாடெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள், நம்மீது திணித்த பிரிவினை நஞ்சு. ஆதித்தமிழ் சமூகத்தில் குழுக்களாகப் பிரிந்து பிரிந்து பல தொழில் செய்துவந்தார்கள். ஒரு குழுவாகப் பிரிந்து குறிப்பிட்ட ஒரு தொழில் மட்டும் செய்யும்போது அந்த தொழில் சிறப்பாக அமையும் அந்தகுழுவில் இடம் பெற்றவர்கள் தொடர்ந்து அதே வேலையைச் செய்யும்போது அந்த தொழிலில் மேம்பட்டவர்களாக அவர்கள் திகழ்வார்கள்.

பிறகு ஒவ்வொரு குழுவும் தங்களின் தயாரிப்புக்களையோ அல்லது தங்களின் சேவைகளையோ மற்ற குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளும். இதன்மூலம் ஒட்டுமொத்த குழுக்களும் நேர்த்தியான சேவையையும், உயர்ந்த தயாரிப்புக்களையும் பெற முடிந்தது. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் தொழில் சார்ந்த பெயர்களில் அழைக்கப்பட்டன. உதாரணமாக குயவர் குலம், மருத்துவர் குலம், வேளாளர்குலம், மறவர்குலம் என்று பெயர்கள் நீளும் இவர்களுக்கிடையில் தீண்டாமை பேதமோ, தாழ்மை உயர்வு பேதமோ இருந்ததில்லை. இந்த குழுக்களுக்குள் திருமண சம்பந்தம் உண்டு.

"பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்" என்று அப்பர் குறிப்பிடுகிறார். முளைத்த இடத்தில் இருந்து வேரொடு பிடிங்கி வரப்பு தாண்டி நட வேண்டிய பயிறுக்கு நாற்று என்று பெயர். தன் கணவனின் தங்கையை (நாற்று + ஆனார் = நாற்றனார்) நாத்தனார் என்று அழைப்பதை இன்றும் காணலாம்.

சாதிப் பாகுபாட்டின் காரணமாக நம் பல நல்லனவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். மருத்துவர் குலம் என்ற குல மரபை அம்பட்டன் சாதி என்று சிறுமைப்படுத்தி கீழ்சாதி என்று அடிமைப்படுத்தி வைத்ததன் விளைவாக மிகமிக உயர்வான மருத்துவ முறைகளெல்லாம் நம்மிடம் மறைந்து வருகிறது. தமிழ் மரபில் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ பாரம்பரியம் உண்டு. தமிழன் அனைவரும் மருத்துவம் செய்பவர்களாக திகழ்ந்தார்கள். மருத்துவ குலம் மட்டும் மருத்துவம் செய்யும் தொழிலை செய்து வந்தார்கள்.

சுசுருதம் என்ற அறுவைசிகிச்சை மருத்துவத்தில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவர்களை சிறுமைப்படுத்தியதன் விளைவாக அறுவைசிகிச்சை மருத்துவ பாரம்பரிய முறைகளை நாம் இழந்துவிட்டோம். முடிதிருத்துவதற்கு மட்டுமே நாம் அவர்களைப் பயன்படுத்துகிறோம். இதுபோல தொழில் குழுக்களுக்குள் உயர்வுதாழ்வு பேதம் கற்பித்ததால் இழந்தவைகள் தான் அதிகமே தவிர நாம் பெற்றவைகள் ஏதுமில்லை.

வேளாண் குடி மரபில் கார்காத்தவேளாளர் என்று உட்பிரிவு உண்டு கார் என்றால் மழைமேகம் என்று பொருள். நீரை தேக்கி வைத்திருப்பதே மழைமேகமாகும். நீரை தேக்கிவைத்து பயன்படுத்தும் நீர் மேலாண்மைத் தொழில் புரிந்து வந்தவர்களே கார்காத்த வேளாளர்குடிகள் என்று அழைக்கப்பட்டனர். இன்றைய ராணுவம் போலீஸ் போல காவல் தொழில் புரிந்தவர்களே மறவர் குலம் என்று அழைக்கப்பட்டனர்.

இப்படி ஒவ்வொரு குலமும் தொழில் சார்ந்து பிரிந்தும் கொண்டாட்ட இன்பம் சார்ந்து கூடியும் வாழ்ந்தவர்கள் நம் பெரியவர்கள் இவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது சிறிதும் இல்லை. எந்த ஒரு மனிதனையும் பிறப்பினால் இழிவுகற்பிக்கும் தன்மை தமிழுக்கோ தமிழனுக்கோ இருந்ததில்லை.

ஒவ்வொரு சாதிக்கும் உயர்வும் உண்டு. தாழ்வும் உண்டு. எல்லா சாதியிலும் அறிவாளிகளும் பிறந்திருக்கிறார்கள். முட்டாள்களும் பிறக்கிறார்கள். எனவே சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது. சாதியப் பாகுபாடு தாழ்ந்த சாதிக்காரர்களுக்கு தீங்கு இழைப்பதாகவும் உயர்ந்த சாதிக்காரர்களுக்கு நன்மை செய்வதாகவும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது பொய் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற பாகுபாடில்லாமல் தீமையை மட்டுமே தருகிறது.

சாதிப்பாகுபாடு உயர்ந்த சாதியில் பிறந்தவர்கள், ஆச்சாரம், அனுஷ்டானம், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவைகளால் படும் துன்பம் தாழ்ந்த சாதிக்காரர்கள் அனுபவிக்கும் துன்பத்தைவிட கொடுமையானது. சில கிராமங்களில் ஒரே ஒரு பிராமண வீடு இருக்கும். அந்த வீட்டுக் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்திருக்க முடியாமல் தவிக்கும் தவிப்பை நான் பார்த்திருக்கிறேன்.

சைவ நெறியின் உயர்கருத்துக்களை எந்தவித சாதிபேதமும் இல்லாமல் அனைவரும் அறிந்திருந்தனர் என்பதைக் கிருபானந்த வாரியார் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் ஒரு மாலைப் பொழுதில் அன்பர்களுடன் இயற்கை அழகை ரசித்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்.

signal-2026-04-18-172135_004

"சாமி கொஞ்சம் பஞ்சாக்கரம் கொடுத்துட்டுப் போ"

என்று தலையில் விறகுக் கட்டையை சுமந்தபடி ஒரு தலித் இளம்பெண் கேட்டாள். திருநீறு கொடுங்கள் என்பதைத்தான் அந்தப்பெண் அப்படி கேட்கிறாள். ஐந்தெழுத்தை ஓதித்தருவதால் திருநீறைப் பஞ்சக்கரம் என்று அழைப்பது சைவ சித்தாந்தம் கற்றறிந்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரிந்தது என்று நினைத்திருந்த கிருபானந்த வாரியாரை வியக்க வைத்தது இச்சம்பவம். வழிவழியாக சைவ நெறியில் செழுமித்திளைத்த மண்ணில் பிறந்த ஒரு பெண் இப்படி பேசுவது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இச்சம்பவம் நிகழ்ந்ததை வாரியார் அய்யா அவர்களே பதிவு செய்திருக்கிறார்.

அசைவ உணவு சாப்பிட ஏங்கி துன்பப்படும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். கணவனை இழந்த உயர்சாதி பெண் விதவைகள் படும் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். இப்படி சாதியப்பாகுபாடு உயர்சாதியினருக்கும் தீமைதான் தருகிறது.

அதனால்தான் உயர்சாதி என கருதப்படும் பிராமணர் குலத்தில் பிறந்த பாரதி "குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று பாடுகிறான். அதாவது எந்த ஒரு குலத்தையும் இழிவாகச் சொல்வது எவ்வளவு பாவமோ அதற்கு நிகரான பாவம் உயர்த்திச் சொல்வதும் என்கிறார் பாரதி.

சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்த பெரியவர்களெல்லாம் சாதியின் பெயரால் அறியப்படுகிறார்கள். அவர்களையெல்லாம் சிலைகளாக்கி பாதுகாப்பு என்ற பெயரில் கூண்டுக்குள் அடைத்துவிட்டு சாதி அரசியலை நடத்திக் கொண்டு இருக்கிறோம். பகுத்தறிவு பேசும் கட்சிகள் கூட சாதி அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்துகிறது. குட்டி குட்டி சாதிக்கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் இது எதிரானது.

ஒவ்வொரு மனிதனும் சாதிபேதத்திலிருந்து கடந்து வரவேண்டும் அவ்வாறு கடந்து வர இயலாதவர்கள் குறைந்தபட்சம் சாதிவெறி இல்லாமல் சாதிப் பற்றுடனாவது இருக்கலாம். தன் சாதியை உயர்த்திப்பேச வேண்டும் என்பதற்காக அடுத்த சாதியை தாழ்த்திப் பேசாமல் இருக்கவேண்டும். மாநாடு நடத்தி அடுத்த சாதிக்காரனை கோபமூட்டாமல் இருக்க வேண்டும்.

சாதி மறுத்து வாழ்தல் அன்பாகிப் போதல், சாதிப் பற்றுடன் வாழ்வது அன்பாக இருத்தல், சாதி வெறியுடன் வாழ்வது அன்பை விட்டு விலகி இருத்தல் இதில் எதுவாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் சாதியில் ஏழைப்பெண்ணை வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது, வசதியில்லாத குழந்தைகளை படிக்கவைப்பது போன்ற செயல்களே சாதிப்பற்று அதை விடுத்து அடுத்த சாதிக்காரனை கொல்ல நினைப்பது அல்லது தாழ்த்த நினைப்பது சாதிப்பற்று அல்ல.

signal-2026-04-18-172135_002

தாழ்ந்த சாதியில் பிறந்த திருநீலகண்டத்து யாழ்பாணரை சொக்கநாதர் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற திருஞான சம்பந்தரின் செயலையும் சிவனுக்காக தன் கண்ணை பிடுங்கிய கண்ணப்ப நாயனாரின் செயலையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.

கருத்துகள் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதலில் கருத்தைச் சேருங்கள்!